தொல்காப்பிய அறிவு
தொல்காப்பிய மரபியல் பாடல் ஆறு வகையான அறிவினை குறிப்பிடுகிறது. அந்த பாடல்,
ஓரறிவதுவே உற்றறிவு அதுவேஇரண்டறிவு அதுவே அதனொடு நாவேமூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கேநான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணேஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியேஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
உயிர்களின் பரிணாம வளர்ச்சியையும் உயிரியல் கோட்பாடுகளையும் விளக்கவே இந்த பாடல் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் முழு விளக்கத்தை உயிரியல் பாடத்தில் காணலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது மெய், நாக்கு, மூக்கு, கண், செவி மற்றும் மனம் அதாவது கற்பனையாற்றல் ஆகிய ஆறு புலன்களை அறிவு என குறிப்பிடுகிறது இந்த பாடல்.
புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம். நமக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள நாம் மெய், செவி, மூக்கு, நாக்கு, கண் மற்றும் கற்பனையாற்றல் என்ற ஆறு புலன்களை பயன்படுத்தி தெரிந்துகொள்வோம். எனவே புதுப்புது தகவல்களை அறிந்துகொள்ள உதவிடும் உடற்புலன்களை அறிவு என குறிப்பிடுவது சரியானதே என்பது எங்கள் கருத்து.
எது சிறந்த அறிவு
ஒரு தகவலை தெரிந்து கொண்டால் மட்டுமே அது அறிவாகிவிடுமா? இல்லை. பின் வரும் குறள் எது சிறந்த அறிவு என நமக்கு விளக்கிவிடுகிறது. அந்த குறள்,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.
புதுப்புது தகவல்களை அறிந்துகொண்டால் மட்டும் போதாது அறிந்து கொண்ட தகவல்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து ஏற்பவர்களே அறிவிற்சிறந்தவர்கள் என்பது இக்குறளின் விளக்கமாகும். புதிய தகவலை அறிந்து கொள்வதற்கும், அறிந்து கொண்ட தகவல்களை ஆய்வு செய்வதற்கும், நமக்கு தெரிந்த தகவல்களை பிறருக்கு பயன்படும் வகையில் கற்பிப்பதற்கும் புலன்கள் நமக்கு அவசியமாகிறது. எனவே அறிவு என்பதும் புலன் என்பதும் வெவ்வேறல்ல என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே நம் முன்னோர் புலன்களுக்கு அதிக மதிப்பளித்து வந்துள்ளனர். ஆனால் இன்று பலருக்கும் புலன்கள் குறித்த புரிதல் இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.
வழிபாடும் மெய்யறிவும்
ஏதாவதொரு செயலை தொடங்கும் பொழுது ஒரு சில பொருட்களை கொண்டு வழிபாடு செய்வது நம் வழக்கம். அப்பொழுது இவற்றை ஏன் பயன்படுத்துகிறோம்? என்று குழந்தைகள் கேள்வி கேட்பதும் இயல்பாக நடக்கும். இந்த வினாவிற்கு சற்றும் சிந்திக்காமல் அது சாமிக்கு என பொதுவாக சொல்லிக்கொடுத்து மூடநம்பிக்கையை வளர்த்துவிடுகிறோம் நாம். உண்மையில் இந்த வழக்கம் எப்பொழுது வந்தது எதற்காக வந்தது என சற்றே ஆய்வு செய்வோம் வாருங்கள்.
முதலில் என்னென்ன பொருட்களை வழிபாட்டின் பொழுது பயன்படுத்துவார்களென பட்டியலிடுவோம். பொதுவாக நீர், மணி, மேளம், பூ, பத்தி, சாம்பிராணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் மற்றும் விளக்கு போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம். இந்த பட்டியலில் உள்ள பொருட்களை உற்று நோக்கினால் அனைத்து பொருட்களுமே ஏதாவதொரு புலனோடு தொடர்புடையதாக இருக்கும். அதாவது நீர் தெளித்தல் என்பது தோலின் தொடுவுணர்வினோடும், மணி மேளம் போன்ற இசை கருவிகள் காதுடனும், பூ பத்தி மற்றும் சாம்பிராணி போன்றவை மூக்குடனும், வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் போன்றவை நாக்குடனும், கற்பூரம் விளக்கு போன்றவை கண்ணுடனும் தொடர்புடைய பொருட்கள்.
பகுத்தறிவு
நல்லதொரு செயலை தொடங்கும் பொழுது வழிபாடு செய்து தொடங்குவது கடவுளை மகிழ்விப்பதற்காக அல்ல. அனைத்து புலன்களும் குறிப்பிட்ட அந்த செயலின் மீது கவனத்தை செலுத்தினால் மட்டுமே அச்செயலில் வெற்றி பெற முடியுமென்பதை உணர்த்திடவே இந்த வழிபாட்டு முறையை தொன்றுதொட்டு பன்னெடுங்கால வழக்கமாக கொண்டுவந்துள்ளனர் நம் முன்னோர். நம் பண்பாட்டில் அனைத்து இடங்களிலும் புலன்களிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்த இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமென நினைக்கிறேன்.