பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுவது எப்படி

பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுவது எப்படி?

வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று சொல்வது வழக்கம் இதையே,

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

என்ற திருக்குறளும் உறுதி செய்கிறது. சரியான நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். எனவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதிலும் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெறுவது எளிதானதல்ல. அப்படிப்பட்ட பேச்சுப்போட்டியில் பங்கெடுப்போர் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தேவைகளை இனி காண்போம்.

பேசும் மொழிநடை

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழி அனைவருக்கும் நினைவிருக்குமென நம்புகிறேன். முறையான பயிற்சியின் வழியாகத்தான் எதிலுமே வெற்றிபெற முடியும். அதுபோலவே அனைவரையும் கவரும் வகையிலான மொழிநடையில் பேச, மற்ற பேச்சாளர்கள் எப்படி பேசுகின்றனர்? ஒவ்வொரு சொல்லையும் எப்படி உச்சரிக்கின்றனர்? பேசும் பொழுது அவர்களின் உடல் மொழி எப்படி உள்ளது? என்பனவற்றை உற்று கவனித்து, வீட்டிலும் நண்பர்களிடமும் நிறைய பேசிப்பழகினால் நம் பேச்சின் மொழிநடை பலரையும் கவரும் வகையில் மெருகேறும்.

பேச்சில் உயிர் இருக்க வேண்டும்

உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தி ஒவ்வொரு சொல்லிற்கும் உரிய ஏற்ற இறக்கத்தை கொடுத்து பார்வையாளர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் பேச்சு இருக்க வேண்டும். நகைச்சுவை உணர்வை தூண்டும் வகையில் பேசுவது மட்டுமே உங்களை மிகச்சிறந்த பேச்சாளரென அடையாளப்படுத்திவிடாது. அச்சம், அதிர்ச்சி, ஆச்சர்யம், ஆதரவு, ஆர்வம், கோபம், பெருமிதம், பாசம் மற்றும் நேசம்மென பல உணர்வுகள் உள்ளது. பேச எடுத்துக்கொண்ட தலைப்பை பொறுத்து அதற்கேற்ற உணர்வுடன் உங்கள் பேச்சு இருக்க வேண்டும். உணர்வுடன் பேசுவது தான் நம் பேச்சிற்கு உயிரை கொடுக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

முன்னுரை

பேச்சை தொடங்கும் பொழுது கவித்துவமான முன்னுரையுடன் வணக்கத்தை சொல்லித் தொடங்குவது அனைவரையும் கவரும். உங்களுக்கென்று தனித்த அடையாளத்தை பெற்றிட கவித்துவமான முன்னுரைப்பேச்சு மிக மிக அவசியம். உங்களுக்கான முன்னுரை வணக்கத்தை எழுதி அதை எவ்வித பிழையுமில்லாமல் பேசப்பழகிக்கொண்டால், அந்த ஒரு முன்னுரையையே அனைத்து பேச்சுப்போட்டியிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருத்து நிறைந்த பேச்சு

“ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழியைப்போல நம்முடைய பேச்சில் மொழிநடையும் மூலக்கருத்தும் சரிக்குச்சரி கலந்து இருக்க வேண்டும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

நம் கருத்தினை வெல்லக் கூடிய மற்றொரு கருத்து இல்லையென்பதை நன்றாக அறிந்த பின்பே அதை பேச வேண்டும். நாம் பேச எடுத்துக்கொண்ட தலைப்பில் இதற்கு முன் மற்றவர்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து, அதன் பின்பு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பனவற்றை முடிவு செய்ய வேண்டும்.

தேவையற்ற கருத்துகளை பேசக்கூடாது

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் கேட்பவருக்கு ஏதாவதொரு வகையில் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். நேரத்தை விரையமாக்கும் தேவையற்ற பேச்சினை பேசக்கூடாது. சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட பேச்சு எந்த வகையிலும் பயனளிக்காது என பின்வரும் குறள் குறிப்பிடுகிறது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பேசுவது நம் கருத்தாக இருக்க வேண்டும்

பிறர் ஏற்கனவே பேசிய அல்லது எழுதியவற்றை எழுதிச்சென்று அப்படியே ஒப்பிக்கக்கூடாது. ஒருவேளை அவற்றை பேசினால் தான் நாம் சொல்ல வரும் கருத்தை சொல்ல முடியும் என்ற சூழல் வந்தால் அந்த கவிதை அல்லது கட்டுரைக்கு உரிமையுள்ளவரின் பெயரை கட்டாயம் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். இது நம்மீதுள்ள நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.

முடிவுரை

இறுதியாக பேச்சை முடிக்கும் முன் நாம் பேச எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு தெளிவான தீர்வினை சொல்லி பார்வையாளர்களிடம் சில வேண்டுகோள்களை வைத்து பேச்சை முடிக்க வேண்டும்.

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற கொடுத்துள்ள குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும் என கருதுகிறேன், நன்றி.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.