ஐம்புலன் அறிவும் கல்வியும்

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும். அவ்வாறு இயங்கத்தொடங்கும் குழந்தையின் உடலில் உள்ள புலன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தனது செயல்பாட்டை தொடங்கி விடுவதுமில்லை, ஒவ்வொரு புலனாகத்தான் செயல்படத் தொடங்கும்.

புலன்கள் செயல்படத் தொடங்கும் வரிசை

தாயின் கருவறையில் இருந்து வெளிவந்த குழந்தை முதன் முதலாக தனது தோலின் மூலம் புதிய சூழலை உணர்ந்து தொடு உணர்வு செயல்படத் தொடங்கும். அதன் பின் சுற்றியுள்ளவர்கள் எழுப்பும் ஒலியை தனது காதுகளை கொண்டு கேட்கும். மூன்றாவதாக மூச்சுவிட முயற்சித்து அழுவதும், அழுத பின் பசிக்கு நாவினால் தாய்ப்பால் சுவைப்பதும் நிகழும். கண் திறக்க இரண்டு அல்லது மூன்று நாட்களாகும், இறுதியாக கற்பனை திறனும் சிந்தனையாற்றலும் செயல்பட பல நாட்களாகும்.

இதேபோல் ஒரு குழந்தை வளர்ந்து முதிர்ந்து இயற்கையாக உடல் செயல்பாடு குறையும் பொழுதும் முன் சொன்ன வரிசைக்கு நேரெதிராக புலன்களின் செயல்பாடு குன்றும். வயது முதிர்ச்சியினால் இறக்கும் ஒருவருக்கு முதலில் கண் பார்வை குறையும். அடுத்து நீர்க்கோழையினால் பேச்சு குளறும், அதனால் மூச்சுவிடுவது தடைபடும். அதன் பின் செவியின் கேட்கும் திறன் குறைந்து உயிர் பிரிந்த பின் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருந்த தோலிற்கு தேவையான ஆற்றல் கிடைக்கமால் போகவே உடல் குளிர்ந்து போகும்.

இவற்றை அடிப்படையாக வைத்து மெய் > செவி > மூக்கு > நாக்கு மற்றும் கண் என்ற வரிசைதான் உடற்புலன்களின் சரியான வரிசை என்பதை உறுதி செய்யலாம்.

புலன்களை புரிந்துகொள்வோம்

தான் உணர்ந்ததை மூளைக்கு கடத்தி, அந்த தகவலை மொத்த உடலிற்கும் கொண்டு செல்வதே புலன்களின் முதன்மையான பணியாகும். அதாவது ஒரு மனிதன் விழித்திருக்கும் பொழுது அனைத்து புலன்களும் செயல்பட்டு கொண்டிருக்கும். ஆனால் எந்த புலனின் மீது மூளையின் கவனம் திரும்புகிறதோ அந்த புலன் உணர்வதைத்தான் உடல் முழுவதிற்கும் மூளை கடத்திச்செல்லும்.

எந்த புலனிற்கு மூளை அதிக முதன்மைத்துவம் கொடுக்கும் என்பதை ஆய்வு செய்தோமென்றால், வெப்ப நிலை மாற்றத்தை உணரும் தோலிற்குத்தான் முதலிடம் கிடைக்கும். உடலிற்கு ஏற்ற வெப்பநிலை இல்லாத இடத்தில் இருக்கும் பொழுது அதாவது அதிக குளிர் அல்லது அதிக பெப்பமுள்ள இடத்தில் இருக்கும் பொழுது மற்ற புலன்களான காது, மூக்கு, நாக்கு மற்றும் கண் ஆகியவற்றின் மீது கவனத்தை செலுத்த முடியாது. ஏனெனில் தோலின் உணர்வுகள் மூளையை செயல்பட விடாமல் தடுத்துவிடும். மேலும் வெப்பநிலை மாற்றத்தை உணரும் தோலை மூளையால் கட்டுப்பத்தவும் இயலாது.

எடுத்துகாட்டாக, மூச்சு விடுவதை நாம் நினைத்தால் சிறிது நேரம் கட்டுப்படுத்த முடியும் அதுபோலவே கண்கள் பார்க்கும் திசையை மாற்றவோ கண்களை மூடிக்கொள்ளவோ முடியும். ஆனால் வெப்பநிலை மாற்றத்தை உணரும் தோலை நாம் முயற்சி செய்தாலும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த இயலாத புலன்களில் தோலிற்கு அடுத்த நிலையில் உள்ளது காதுகளாகும். உணர்வுகளை தூண்டுவதிலும் சரி மற்ற புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் சரி தோல்களுக்கு அடுத்த நிலையில் உள்ளது காதுகள் தான். மூன்றாவது நிலையில் உள்ள புலன் மூக்கு அதற்கடுத்து நான்காவது நிலையில் உள்ளது நாக்கு மற்றும் ஐந்தாவது நிலையில் உள்ளது கண்கள்‌.

உடலால் கட்டுப்படுத்த இயலாத புலன்களாக தோலும் காதுகளும் உள்ளன. மூக்கு உடலால் கட்டுப்படுத்த முடிந்த புலன் தான் என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாது. மீதமுள்ள நாக்கும் கண்களும் உடலின் முழு கட்டுப்பாட்டில் உள்ள புலன்களாகும். தேவையிருக்கும் பொழுது மட்டும் பயன்படுத்தப்படும் புலன்களாக நாக்கும் கண்களும் உள்ளன. இதை காரணமாக கொண்டும் மெய், செவி, மூக்கு, நாக்கு மற்றும் கண் என ஐம்புலன்களை வரிசைபடுத்தலாம்.

புலன்களுக்கும் குழந்தைகள் கல்விக்கும் என்ன தொடர்பு?

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

செல்வத்திலெல்லாம் தலைசிறந்த செல்வம் காதுகளால் கேட்கும் அறிவார்ந்த தகவல்\” என்பது இந்த குறளின் விளக்கம். இதில் செல்வத்தில் எல்லாம் சிறந்த செல்வம் அறிவு தான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஏன் அறிவை செவிச்செல்வம் என திருக்குறள் குறிப்பிடுகிறது? கண்களை கொண்டு அறிவை வளர்த்துக்கொள்ள இயலாதா? ஏன் கண்களை அறிவை வளர்க்க உதவும் புலனிற்கான சிறப்பிடம் வழங்கவில்லை? என்பனவற்றை சிந்திக்க மறந்துவிடுகிறோம். திருக்குறள் என்றல்ல அனைத்து தமிழ் இலக்கியத்திலும் அறிவை குறிப்பிட காதுகளைத்தான் குறிப்பிட்டிருப்பர். கேள்வி ஞானம் என்ற சொல்லாடலை கொண்டும் இதை நாம் உறுதி செய்யலாம்.

கண்களுக்கு ஏன் கல்வியில் சிறப்பிடம் வழங்கப்படவில்லை?

தனக்கு தெரியாத ஒன்றை பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்ள காதுகளும், நூல்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள கண்களும் மிக மிக அவசியமாகும். மூக்கு மற்றும் நாக்கு ஆகிய இரண்டு புலன்களும் அறிவை வளர்க்க பெரிதும் பயன்படுவதில்லை. உயிர் வாழ்வதற்கு தேவையான உயிராற்றலை உடலிற்கு வழங்கிடவே இவ்விரண்டு புலன்களும் பயன்படுகின்றன. தொடு உணர்வின் பயன் முற்றிலும் மாறுபட்டது, இதைகுறித்து பிறகு தெளிவாக காணலாம்.

அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் புலன்களில் மிகவும் முக்கியமானவை காதுகளும் கண்களும் என்ற கருத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை. ஆனால் காதுகளுக்கு கொடுக்கும் மதிப்பை ஏன் நம் முன்னோர் கண்களுக்கு கொடுக்கவில்லை? என்ற வினாவிற்கு பின்வரும் இரண்டு காரணங்கள் உள்ளது.

1. காதுகளின் வழியாக கடத்தப்படும் தகவல்கள் உயிர்ப்புடன் மனதில் பதியும்.

தற்கால கல்விமுறையில் கண்களை பயன்படுத்தி அதாவது புத்தகத்தை படித்து தான் அறிவு வளர்கிறது என்று நாம் அனைவரும் கருதிவருகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல, பள்ளி ஆசிரியர் அல்லது கல்லூரி விரிவுரையாளர் பாட நூலில் உள்ளவற்றை படித்து விவரித்து விளக்கினால் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் விளங்கும். அதாவது கண்களால் பார்த்து படிப்பதை விடவும் ஆசிரியரின் விளக்கத்தை காதுகளால் உள்வாங்கி கேட்பதால் தான் பாடம் விளங்குகிறது. பள்ளி கல்லூரிகளில் வழங்கப்படும் பாடநூல் என்பது பாடக்குறிப்புகள் அடங்கிய ஒரு குறிப்பு நூலேயாகும். ஆசிரியர்கள் எந்த பாடத்தை முதலில் நடத்த வேண்டும் என்னென்ன தகவல்களை மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என வழிகாட்டவும், பிற்காலத்தில் மறந்து விட்டால் மீண்டும் நினைவூட்டிக்கொள்ளவும் தான் பாடநூல்கள் வழங்கப்படுகின்றது. ஆசிரியரின் விளக்கம் இல்லாமல் பாட நூலை மட்டும் வைத்து மாணவர்களால் அறிவை வளர்த்துக்கொள்ள இயலாது.

சத்தம் போட்டு படிக்கும் பொழுது நாம் படிப்பது நம் காதிலேயே மீண்டும் மீண்டும் ஒலிப்பதால் மிக எளிதாக நம் மனதில் பதியும் என்ற காரணத்திற்காகத்தான் படிக்கும் பொழுது சத்தம் போட்டு படி என ஆசிரியர்கள் சொல்கின்றனர். அதாவது கண்களை பயன்படுத்தி படிப்பதை விடவும், நாம் எழுப்பும் ஒலியை காதால் கேட்பதால் மனதில் எளிதாக பதிய வைக்க இயலும் என்ற அறிவியல் காரணமே சத்தம் போட்டு படிக்கச்சொல்வதற்கான அடிப்படை காரணம்.

பாடத்தை வெரும் உரை நடையாக இல்லாமல் சந்தத்துடன் கூடிய பாடலாக மாற்றி படிக்கும் பொழுது மனதில் நன்றாக பதியும். தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே சந்தத்துடன் பாடவேண்டிய பாடல்களாக எழுதப்பட்டுள்ளதற்கு இதுவே அடிப்படை காரணமாகும். ஆங்கிலத்தில் tune என சொல்லப்படும் சந்தம் மிக எளிதாக அனைவர் மனதில் பதிந்துவிடும். பாடல் வரிகள் மறந்தாலும் சந்தம் மறக்காமல் இருக்கும். எனவே நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள நாம் படிக்கும் அனைத்து தகவல்களையும் சந்தத்துடன் கூடிய பாடலாக மாற்றி பதிவு செய்துகொள்வது மிகப்பெரும் பயனாக இருக்கும்.

சந்தம் அனைவரது உயிருடனும் கலந்து, மிக எளிதாக மனதில் பதிந்துவிடும் என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த காரணத்திற்கு செல்கிறேன்.

2. கண்களை அதிகம் பயன்படுத்துவது உடல் நலனிற்கு கேடாக மாறும். ஏனெனில் கண்கள் உடல் உள்ளுறுப்பான கணையம் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய உறுப்பாகும். இந்த கணையம் மற்றும் கல்லீரலில் சிக்கல் ஏற்படும் பொழுது தான் மஞ்சள் காமாலை நோய் வருகிறது. மஞ்சள் காமாலை நோய் வந்தால் கண்களில் மருந்து விட்டு குணப்படுத்துவது நம் முன்னோருடைய மருத்துவ முறை என்பதே அனைவரும் அறிவோம். கணையம் மற்றும் கல்லீரலின் வேலை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதாகும். நம் கண்களுக்கு அதிக வேலை கொடுத்தால் கல்லீரலும் கணையமும் பாதிக்கப்படும். இதனால் தான் நாள்தோறும் இரவில் கண்களை மூடி உறங்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு உறங்கி எழுந்தால் தான் உடற்கழிவுகள் வெளியேறுவதிலும் சிக்கல் இருக்காது.

கண்களை அதிகம் பயன்படுத்துவதால் இவ்வளவு சிக்கல் உள்ளதா? அப்ப காதுகளை மட்டுமே பயன்படுத்தி கல்வி முறையை உருவாக்கிடுவது தான் நல்லது என்று சிலர் கருதலாம். ஆனால் புலன்கள் அனைத்துமே அலைபாயும் தன்மையுடையது, அதிலும் மற்ற புலன்களை காட்டிலும் கண்கள் அதிகம் அலைபாய்ந்து கவனத்தை சிதறடிக்கும். அதனால் செவியை மட்டும் பயன்படுத்தி அறிவை வளர்க்க முயற்சித்தால், செவியில் விழும் எதையும் கவனிக்க விடாமல் கண்களின் அலைபாயும் தன்மை தடுத்துவிடும். மேலும் கண்களால் மட்டுமே செயல்முறை விளக்கங்களை பார்க்க முடியும். என்ன தான் கேள்வி ஞானம் மூலம் பலவற்றை மனதில் பதிவு செய்து வைத்திருந்தாலும் செயல்முறை என வரும் பொழுது கண்களின் பங்கு மிகமிக அவசியமாகிறது.

எனவே 75% காதுகளையும் 25% கண்களையும் பயன்படுத்தும் வகையில் கல்வி முறை அமைந்திருந்தால் மட்டுமே அது பயனளிக்கும்.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.