மத்தி மீனின் பெயர்கள்
சாளை, மத்தி (Mathi meen) மற்றும் மொந்தன் என்ற பெயர்களில் தமிழில் அழைக்கப்படும் மீனானது ஆங்கிலத்தில் Sardine fish மற்றும் Pilchard என்று அழைக்கப்படுகிறது. இந்த மீன்கள் மலையாளத்திலும் சாளை மற்றும் மத்தி என்றே அழைக்கப்படுகிறது. தெலுங்கில் காவாலு (kavalu fish) என்றும் , பெங்காலியில் கொய்ரா (khoira fish) என்றும் அழைக்கப்படுகிறது.
மத்தி மீனின் வகைகள்
மத்தி மீன்கள் அவற்றின் உருவ அமைப்பு, வண்ணம் மற்றும் சுவையினை அடிப்படையாக கொண்டு ஒழுகுச்சாளை, பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்), பேச்சாளை (சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்), கறுப்புச்சாளை (நச்சாளை), கன்னஞ்சாளை, பறவைச் சாளை (கடலின் மேற்பரப்பில் பறக்கும்), செவிட்டுச் சாளை, மாங்காய்ச்சாளை, கீரிமீன் சாளை, தடிக்கீரிச் சாளை, கொழுவச் சாளை, கொழி சாளை, தொழுவன் சாளை, ஊசிச்சாளை, வட்டச்சாளை (சூடை) மற்றும் மேலாச் சாளை (சாளையில் பெரியது) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கறுப்புச் சாளை, பேச்சாளை, வட்டச் சாளை (சூடை), கீரிமீன் சாளை மற்றும் கொழுவச்சாளைகளே அதிகம் கிடைக்கிறது.
மத்தி மீனின் வாழ்விடம் மற்றும் உணவு
மத்தி மீன்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. இந்த மீன்கள் வங்கக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் பெருங்கூட்டமாக வாழும் மீனினமாகும். அளவில் சிறிய சாளைகளான கறுப்புச் சாளை, பேச்சாளை, பூச்சாளை மற்றும் கன்னஞ்சாளை போன்றவை கடற்பாசிகளை உணவாக உட்கொண்டு வாழும் மீன்களாகும். அளவில் பெரிய சாளைகளான கொழுவச்சாளை சூடைச்சாளை மற்றும் மேலாச்சாளை போன்றவை கடற்பாசிகள் மற்றும் நெத்திலி போன்ற பொடி மீன் கூட்டங்களை வேட்டையாடி உண்ணும் மீன்களாகும்.
மத்தி மீன் பயன்கள்
மத்தி மீன்கள் ஏழைகளின் வஞ்சிரம் என கூறப்படுகிறது. உண்மையில் வஞ்சிர மீனை விடவும் அதிகளவிலான ஆற்றலை நம் உடலிற்கு வழங்கக்கூடியதாகும் சாளை மீன்கள். வஞ்சிர மீன்கள் அளவில் பெரியதாகவும் சதைப்பகுதியில் முள் இல்லாமல் இருப்பதும் உயர்வாக கருத்தப்படுவதற்கான காரணமாகும். மேலும் வஞ்சிர மீன்கள் அதிகளவில் பிடிபடாத காரணத்தினாலும் அவற்றின் சந்தை மதிப்பு அதிகம்.
ஆனால் சாளை மீன்கள் அதிகளவில் கிடைக்கும் மீனினம் ஆகும். மேலும் அளவில் சிறியதாகவும் சதைப்பகுதியில் முள் இருப்பதாலும் சாளை மீனின் மதிப்பை அறியாமல் வஞ்சிரத்துடன் ஒப்பிடுகின்றனர். உண்மையில் அதிக செலவழித்து வஞ்சிர மீனை சாப்பிடுவதை விட சாளை மீன்களை சாப்பிடுவது சுவை மற்றும் ஆற்றல் எனும் இரண்டு அடிப்படையிலும் நன்மையானதாகும். சாளை மீன்கள் உணவாக மட்டுமல்லாமல் மீன் எண்ணெய் எனும் மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றது. இதன் எண்ணெய் தன்மையானது மனித உடலின் பல உறுப்புகளுக்கு பலவகை ஆற்றலை வழங்கக்கூடியதாகும்.
மத்தி மீனை உண்ணும் முறைகள்
கேரளம் மற்றும் தமிழகத்தில் இம்மீனைக்கொண்டு கீழுள்ள உணவுகளை சமைத்து உண்பதை வழமையாக கொண்டுள்ளனர். மத்தி மீனை சமைப்பதற்கு முன், செதிலை நீக்கி வயிற்றுப் பகுதியில் குடல் மற்றும் தலையில் உள்ள செவுள் பகுதிகளை எடுத்துவிட்டு நன்னீரில் கழுவி மேற்பகுதியில் இலகுவாக கீறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவியல், குழம்பு மற்றும் வறுவல் என அனைத்திற்கும் முழு மீனாகவே பயன்படுத்தலாம்.
- மத்தி மீன் அவியல்
- மத்தி மீன் குழம்பு
- மத்தி மீன் வறுவல்
- மத்தி மீன் இரசம்