புதிய கல்வி முறை
தற்காலத்தில் கல்வி எனும் அடிப்படை சேவையானது மிகப்பெரும் வணிகமாக மாறிவிட்டது. பணம் போனாலும் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கிறாதா? என்ற வினாவிற்கு, கிடைப்பதில்லை என்பதே அனைவரும் அறிந்த உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என பெருமை பேசும் நாம் இன்று என்ன சாதித்துள்ளோம் என்றாலும் பதிலில்லை.
சரி நம் முன்னோர் எப்படி வாழ்ந்தனர்? இன்றுள்ள கல்விக்கூடமோ கல்வி முறையோ இல்லாத காலகட்டத்தில் நம் முன்னோரது கல்வி முறை என்ன? ஒருவருடைய தனித்திறனை எப்படி கண்டறிந்தனர்? எப்படி மேம்படுத்தினர்? இப்படிப்பட்ட வினாக்களிற்கான விடை தேடியதன் விளைவாக புதிய கல்வி முறை ஒன்றை வடிவமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த புதிய கல்வி முறைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற தேடலில் உறுதி செய்யப்பட்டதே கணையாளி எனும் பெயராகும்.
கணையாளி என்றால் பொருள் என்ன?
கணையாளி என்ற சொல்லை இரண்டாக பிரித்தாள் கணை +ஆளி என பிரிக்கலாம். கணை எனும் சொல் இரண்டு பொருள் தரும். கணை என்பது அம்பு எனும் பொருளையும் கணையம் என்ற உடல் உறுப்பையும் குறிக்கும். ஆளி எனும் சொல் ஆளுமையுள்ள ஒருவரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.
வானில் ஏவப்படும் ஏவுகணை முதல் சிறு அம்பு வரை அனைத்திலும் பின்பக்கம் சில இறகுகளை ஒட்டி இருப்பார்கள். அந்த இறகுகளின் வேலை, வில்லிலிருந்து வெளியேறிய அம்பு அதாவது கணை காற்றின் வேகத்தில் திசைமாறிவிடாமல் இலக்கை நோக்கி பயணிக்க உதவியாக இருப்பதாகும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் வில்லில் இருந்து வெளியேறிய கணையை ஆளக்கூடியது அந்த இறகுகள் தான். அப்படி கணையை ஆளும் இறகுகளின் பெயர் கணையாளியாகும்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் ஏதாவதொரு துறையில் சாதிக்க பிறந்ததே! கால ஓட்டத்தின் வேகத்தில் அக்குழந்தைகள் திசைமாறிவிடுகின்றன. அவ்வாறு திசைமாறிவிடாமல் அவரவரின் தனித்திறனை உணர்ந்து உன்னத நிலையை அடைய வழிகாட்டும் கல்வி முறைக்கு கணையாளி எனும் பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இப்பெயரை வைத்துள்ளோம்.
கணையாளியின் நோக்கம் என்ன?
இவ்வுலகில் பரவலாக செறிந்து கிடக்கும் மூட பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்வதும் கணையாளியின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். கணை என்ற சொல் கணையம் என்ற உடல் உறுப்பையும் குறிக்கும் என குறிப்பிட்டிருந்தோம். கணையம் என்ற உடல் உள்ளுறுப்பின் வேலை உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை நீக்குவதாகும். அதுபோலவே மூடப்பழக்க வழக்கங்கள் எனும் கழிவுகளை அகற்றி மக்களின் மனதை தூய்மைப்படுத்தும் பணியே கணையாளியின் முதன்மையான நோக்கமாகும்.
சுருக்கமாக; வருங்கால தலைமுறையை எவ்வித மூட நம்பிக்கையிலும் சிக்க விடாமல், அவரவர் தனித்திறனை கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு வழி காட்டுவதே கணையாளியின் நோக்கமாகும்.