முத்தமிழ் கல்வி

முத்தமிழ் கல்வி

75% காதுகளையும் 25% கண்களையும் பயன்படுத்தும் வகையில் கல்வி முறை அமைந்திருந்தால் மட்டுமே அது பயனளிக்கும் என்று முன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்படி பட்ட கல்வி முறை எது? எந்த நாட்டில் இத்தகைய கல்வி முறையை உருவாக்கி வைத்துள்ளனர்? அப்படியொரு கல்வி முறை இருக்கிறதாவென பலரும் நினைத்திருக்கலாம்.

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

முத்தமிழ் கல்வி

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் பிறக்கும் பொழுதே தம் மூதாதையரின் மெய்யறிவுடன் தான் பிறக்கின்றது. தனக்கான உணவை உண்பதும், உண்ட பின் கழிவதும், குறிப்பிட்ட உடல் வளர்ச்சிக்கு பின் இணைசேர்வதும் மெய்யறிவின் மூலம் இயல்பாகவே நடக்கிறது. இத்தகைய மெய்யறிவிற்கென்று மிக நீண்ட பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். மெய்யறிவு எனும் இயல்பான அறிவையே சிலர் மரபு என்று சொல்கின்றனர்.

வளரும் பருவத்தில் பிறரின் வழிகாட்டுதலின் மூலமாக புதிய தகவல்களையும் உலகின் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொள்கின்றான் மனிதன். இதையே கேள்வியறிவு அல்லது கல்வியறிவு என்று சொல்கின்றோம்.

சில நேரங்களில் வழிகாட்டுபவரின் அறியாமையினாலும் அல்லது திட்டமிட்ட சூழ்ச்சியினாலும் மரபிற்கு எதிராக கல்வியறிவு அமைந்து விடுகிறது. யார் எதை கற்பித்தாலும் அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தே ஏற்கவேண்டும் என்பதனையும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் திருக்குறள் மூலமாக நம் முன்னோர் கூறிச்சென்றுளள்னர். மரபை கெடுக்கும் விதமாக இயற்கைக்கு எதிராகவுள்ள எந்த கல்வியும் அழிவையே வழங்கிடுமென்பது நம் முன்னார் வாக்கு‌.

சிந்தித்து செயல்பட வேண்டும் என என்ன தான் சொன்னாலும் பலரும் அதை கேட்பதில்லை. அவசரத்தில் எதையாவது செய்துவிட்டு அதனால் உண்டாகும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் அவர்களுக்கு உருவாகிவிடுகிறது. எதிர்விளைவுகளை எதிர்கொண்டு அச்சிக்கலில் இருந்து வெளிவந்த பின், ஏன் இந்த சிக்கல் வந்தது எப்படி இனி இப்படிப்பட்ட சிக்கலில் சிக்காமல் இருப்பது என சிந்தித்து எடுக்கப்படும் தெளிவான முடிவுகளையே பட்டறிவு அதாவது அனுபவ அறிவு என்று சொல்கின்றோம்.

முன் சொல்லப்பட்டுள்ள மரபறிவு, கல்வியறிவு மற்றும் பட்டறிவு என்பனவற்றை கற்பிக்க நம் முன்னோர் வடிவமைத்த கல்வி முறையே இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழ் கல்வி முறையாகும்.

இயற்றமிழ் கல்வி என்றால் என்ன?

இயற்றமிழ் என்பதை கதை, கவிதை மற்றும் கட்டுரை என்று தற்காலத்தினர் கருதுகின்றனர். ஆனால் இவையனைத்தும் இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழின் உட்பிரிவுகளே தவிர இயற்றமிழ் அல்ல.

இயற்றமிழ் என்பது இயல்பாக ஒருவர் மற்றொருவருடன் உரையாடும் உரையாடலேயாகும். இயற்றமிழை கொண்டுதான் இயற்கல்வி வழங்கிட முடியும். ஒருவர் பிறந்தது முதல் இறப்பது வரை தனது பெற்றோர், உற்றார் மற்றும் உறவினர்களுடன் உரையாடி பல தகவல்களை அறிந்துகொள்வார். இதில் பெருமளவு வினா விடை முறையிலான உரையாடலே அதிகமிருக்கும். அதாவது குழந்தைகள் கேட்கும் குழந்தைத்தனமான வினாக்களுக்கு தெளிவான விடையளிப்பதன் மூலமாக குழந்தைகளின் அறிவை வளர்க்க இயலும். இயற்கல்வியின் மூலமாக கிடைக்கும் அறிவே நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு போதுமானதாகும்.

இசைத்தமிழ் என்றால் என்ன?

ஆனால் புதுப்பது அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகி வரும் இக்காலத்தில், அவற்றை குறித்த கல்வியறிவு அதாவது கேள்வியறிவின் தேவை மிகவும் அதிகமாகியுள்ளது. அத்தகைய கல்வியறிவினை வளர்த்துக்கொள்ள நம் முன்னோர் பயன்படுத்திய கல்வி முறையே இசைத்தமிழ் கல்வியாகும்.

தொன்ம காலத்தில் இசையை பண் என குறிப்பிடுகின்றனர். பண் என்பது கருவிகளை வைத்து உருவாக்கிடும் ஒலியை குறிப்பதல்ல. ஒரு கவிதைக்கு உயிர் கொடுக்கும் விதமாக கவிதையின் உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும் முறை தான் பண் என்பதாகும். ஒரு கவிதை பண்ணுடன் இணைந்து வெளிப்படும் பொழுது பாடலாக மாறுகிறது. பண் மற்றும் பாட்டு எனும் இரண்டு சொற்கள் இணைந்து தான் பண்பாடு உருவானது.

இன்று உரைநடை முறையில் புத்தகங்களாக படித்துவரும் பல தகவல்களை நம் முன்னோர் பாடல்களாக மாற்றி பயிற்றுவித்து வந்துள்ளனர். பண்ணுடன் இணைந்த பாடல்கள் மிக எளிதாக மனதில் பதிந்துவிடும் என்பதனால் தான் பண்ணிசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.

மரபறிவு இயற்றமிழ் வழியாகவும் கேள்வியறிவு இசைத்தமிழ் மூலமாகவும் கற்பிக்கப்படுகிறது. அதே போல் பட்டறிவு அதாவது அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள நாடகத்தமிழ் பயன்பட்டது. நாடகக்கல்வியை கொண்டு யாருக்கு என்ன திறமையுள்ளது என்பதை கண்டறியவும் அந்த திறமையை மெருகேற்றிக்கொள்ளவும் நம் முன்னோர் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாம் நாடகக்கல்வி முறையை முற்றிலுமாக மறந்து ஒதுக்கிவிட்டோம்.

நாடகத்தமிழ் என்றால் என்ன?

நாடகம் என்றவுடன் யாரோ நான்கு பேர் மேடையில் நடிப்பதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்ப்பது என்றே அனைவரும் கருதுகின்றோம். சிலர் நடிக்க பலர் பார்க்கும் நிகழ்விற்கு பெயர் கூத்து என்பதாகும். ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது, தனது தலை மற்றும் கைகள் என மொத்த உடலையும் அசைத்து குழந்தைகளின் கண்கள் அலைபாய்வதை தடுக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த தெரிந்த ஆசிரியரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். இந்த உடல் அசைவுகளின் பரிணாம வளர்ச்சியே நடனம், நாட்டியம் மற்றும் கூத்து போன்றவையாகும்.

அதாவது கேள்வியறிவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்வி முறையான இசைத்தமிழின் பரிணாம வளர்ச்சியே நடனம், நாட்டியம், கூத்து மற்றும் திரைப்படம் போன்றவை. கூத்து மற்றும் நடனம் ஆகியவற்றை இசையுடன் இணைந்து பார்க்கும் பொழுது மட்டுமே பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கும். நடனம் நாட்டியம் என்பவை இசையுடன் தொடர்புடையவையே. ஒலியில்லாமல் நடனம், நாட்டியம், கூத்து மற்றும் திரைப்படம் போன்ற கலைகளை விரும்பி பார்க்க இயலாது.

நடனம், நாட்டியம், கூத்து மற்றும் திரைப்படத்தின் வாயிலாக ஒரு புதிய தகவலை குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மிக எளிதாக கடத்த முடியும். தற்காலத்தில் இவை பொழுதுபோக்கு கலைகளாக மாறிவிட்டாலும் பல தகவல்கள் இவற்றின் வழியாகவே மக்களிடம் சென்று சேர்கிறது.

நடனம், நாட்டியம், கூத்து மற்றும் திரைப்படம் என்பவை நாடகத்தமிழ் அல்ல என்பதை நிறுவ இதுவரை கொடுத்துள்ள விளக்கம் போதுமென நினைக்கிறேன். அப்படியானால் பட்டறிவையும் ஒருவரின் தனித்திறனை கண்டறிந்து அத்திறனை மெருகேற்றவும் நம் முன்னோர் பயன்படுத்திய கல்விமுறை எது? அதாவது உண்மையான நாடகத்தமிழ் எது? அடுத்த பதிவில் காணலாம்.

சமூகம்

தாலி – தமிழர் பண்பாடு

எந்தவொரு இனமும் பண்பாட்டு வளர்ச்சியில் தன் ஆதிகால பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விட கூடாது. அந்த இனத்திற்கென்ற வரலாறு அந்த பண்பாட்டின் வழி தான் தொடரும். எனவே திருமணத்தன்று தாலி கட்டும் வழக்கத்தை தொடர்வதே நல்லது. திருமணத்திர்கு பிறகு தாலிக்கயிறு அணியலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும் பெண்ணுக்கானது.

கல்வி

நாடகக் கல்வி என்றால் என்ன?

எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.

முத்தமிழ் கல்வி
கல்வி

முத்தமிழ் கல்வி

இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?

ஐம்புலன் அறிவும் கல்வியும்
கல்வி

ஐம்புலன் அறிவும் கல்வியும்

அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.

அறிவு என்றால் என்ன
கல்வி

அறிவு என்றால் என்ன?

புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.