பள்ளிக்கூடம் சென்று படிப்பது, தேர்வெழுதி மதிப்பெண் வாங்குவது பிறகு பட்டம் பெற்று வேலைக்குச் செல்வதை தான் கல்வி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் கல்வி என்பது பள்ளிக்கூடம் சென்று படிப்பதோ மதிப்பெண் வாங்குவதோ இல்லை. மேலும் கல்வியின் நோக்கம் வேலைக்கு சென்று ஊதியம் வாங்குவதுமல்ல என்பதை புரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கல்வி என்றால் என்ன?
தமிழ் மூல நூலான தொல்காப்பியத்தில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றொரு குறிப்பு உள்ளது. எந்தவொரு சொல்லிற்கும் பொருளுண்டு என்பதாகும் இந்த குறிப்பின் விளக்கம். இந்த குறிப்பின் அடிப்படையில் கல்வி என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.
கல்வி எனும் சொல்லை இரண்டாக பிரித்தால் கல்+வி எனப்பிரிக்கலாம். “இளமையில் கல்” என்றொரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் இந்தப் பழமொழியில் வரும் கல் என்பது கல்வியை குறிக்கிறது. ஆனால் கல் எனும் சொல் நகரும் தன்மையற்ற பொருளையும் குறிக்கும். நகரும் தன்மையற்ற பொருளை குறிக்கும் சொல், அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய தேவையான பயிற்சியை வழங்கும் செயலை குறிக்கும் சொல்லாகவும் இருக்க ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் தானே!
கல் எப்படி கல்வியானது?
வரலாற்று ஆய்வாளர்கள் முற்காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம் மற்றும் பொற்காலம் என்று வரையறை செய்வது வழக்கம். இதில் பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம் என்பவை வேட்டை, வேளாண்மை மற்றும் தற்காப்பு கருவிகளாக கற்களை பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்த காலமாகும். அத்தகைய காலத்தில் குழந்தைகளுக்கு,
- ஒரு கல்லை ஆயுதமாக வடிவமைப்பது எப்படி?
- கற்களை கூர்மைப்படுத்துவது எப்படி?
- கல் ஆயுதங்களை பயன்படுத்துவது எப்படி?
- எந்த விலங்கிற்கு எந்த ஆயுதத்தை பயன்படுத்தினால் அந்த விலங்கை வீழ்த்த முடியும்?
- எந்த கல்லை எந்த நிலத்திற்கு உழுவதற்கும் விதைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்?
இவ்வாறான பயிற்சிகளை தான் வழங்கியிருப்பர். கல்லை கொண்டு வழங்கப்பட்ட பயிற்சியின் தொகுப்பே \”கல்வி\” என்று பெயர் பெற்று பிற்காலத்தில் அனைத்து பயிற்சிகளுக்குமான பொதுப்பெயராக மாறியுள்ளது.
முன்னோர்களின் கல்வி எதற்கு பயன்பட்டது?
- உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்றவற்றை இயற்கையிடமிருந்து பெறுவதற்கு கல்வி பயன்பட்டது.
- பெற்றதை முறையாக பயன்படுத்துவதற்கு கல்வி.
- பயன்படுத்தியது போக மிஞ்சியதை பதப்படுத்தி பராமரிப்பதற்கு கல்வி பயன்பட்டது.
- பயன்படுத்துவதால் உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு கல்வி பயன்பட்டது.
- இயற்கை சீற்றங்களை கணிப்பதற்கும் மீள்வதற்கும் கல்வி பயன்பட்டது.
- உடல் உறுப்புகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் கல்வி பயன்பட்டது.
- மேலும் பல காரணக்களுக்காக கல்வி பயன்பட்டது பயன்பட்டது.
இன்றைய கல்வி எதற்கு பயன்படுகிறது?
- படித்து முடித்து யாரிடமாவது அடிமையாக வேலை செய்ய பயன்படுகிறது.
- அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அனைத்தையும் வாங்கிடலாம் என்ற ஆனவம் வளர பயன்படுகிறது.
- இயற்கையை பற்றிய புரிதல் இல்லாத குழந்தைகளை உருவாகிட பயன்படுகிறது.
- இப்படி உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்றவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அதனால் உருவாகும் கழிவுகளை அகற்றுவதற்கும் நேர்மாறான புரிதலை விதைக்க பயன்படுகிறது.
குறிப்பாக கல்வி மிகப்பெரும் வணிகமாக மாறிவிட்ட இக்காலச் சூழலில் பள்ளிக்கு வெளியே வாழ்வியல் கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டியது பெற்றோராகிய நமது கடமையாகும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழியை காரணம் காட்டியே கல்வி என்பது குழந்தைகளுக்கானது மட்டுமே என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. உண்மையில் ஒருவருக்கு விருப்பம் இருந்து அதற்காக அவர் முயற்சி செய்தால் எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக எந்த குழந்தையும் ஐந்து வயதிலோ பத்து வயதிலோ மது குடிக்க புகை பிடிக்க கற்றுக் கொள்வதில்லை நன்கு வளர்ந்து பெரியவர்களான பின்பே இத்தகைய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். இப்பொழுது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி சரிதானா என்பதை நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.
எது சிறந்த கல்வி?
அடிப்படை கல்வியுடன் சேர்த்து யாருக்கு எது விருப்பமோ அல்லது யாருக்கு எந்த திறன் இயற்கையாக உள்ளதோ அதை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தால் மட்டுமே அவர்களால் அதில் சிறப்பானவர்களாக உருவெடுக்க முடியும். யாருக்கு எந்த துறை சிறப்பாக இருக்கும்? எந்த துறையில் அவர்களுக்கு விருப்பம் உள்ளது? எந்த துறையில் அவர்களால் நல்ல நிலைக்கு உயர முடியும்? என்பதைக் கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை வழங்குவதே மிகச்சிறந்த கல்வியாகும்.