எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியான நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அந்த நிகழ்வுகளின் பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே நாடகக் கல்வி என்பதாகும்.
இயல் இசை நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் என்பது பலருக்கும் தெரிந்த தகவல். ஆனால் இயல், இசை மற்றும் நாடகம் எனும் முத்தமிழை அடிப்படையாக கொண்டு உலகின் தலைசிறந்த கல்வி முறையை உருவாக்கியது நம் முன்னோர் தான் என்பதனை எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளோம்?
அறிவும் கல்வியும் ஐம்புலனோடு தொடர்புடையவை, அத்தகைய புலன்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரை தனித்து இயங்குவதில்லை. தாயின் உடலை விட்டு வெளியே வந்த பின்பு தான் குழந்தை தனி உடலாக இயங்கத்தொடங்கும்.
புலன்களுக்கும் அறிவிற்கும் என்ன தொடர்பு? புலன்களை அறிவு என தொல்காப்பியம் குறிப்பிட காரணம் என்னவென்பதை ஆய்வு செய்தோமானால், பிறருக்கு தெரியாத ஏதேனுமொரு தகவல் நமக்கு தெரிந்திருந்தால் அதை அறிவு என நாம் கருதுவோம்.
கல்வி எனும் சொல்லை இரண்டாக பிரித்தால் கல்+வி எனப்பிரிக்கலாம். “இளமையில் கல்” என்றொரு பழமொழியை நாம் கேட்டிருப்போம் இந்தப் பழமொழியில் வரும் கல் என்பது கல்வியை குறிக்கிறது. ஆனால் கல் எனும் சொல் நகரும் தன்மையற்ற பொருளையும் குறிக்கும்.