நெத்திலி மீனின் பெயர்கள்
நெத்திலி மீன்களை தமிழகத்தில் நெத்திலி (Nethili fish), ஈழத்தில் நெத்தலி மற்றும் நெய்தோலி, ஆங்கிலத்தில் Anchovy / Anchovies fish, மலையாளத்தில் நெத்தோலி மற்றும் கொழுவா, தெலுங்கில் நெத்தலு மற்றும் பொறவலு, கன்னடத்தில் நெத்தல் மற்றும் பொலிங்க கொளத்தாறு, மராத்தியில் கடி என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.
நெத்திலி மீனின் வகைகள்
நெத்தலி (நெய்த்தோலி), கருநெத்தலி (குமரிக்கடலில் மட்டுமே கிடைப்பது), பெருவா நெத்தலி, வெள்ளை வால் நெத்தலி, வெண் நெத்தலி, உருளை நெத்தலி, சிறுகை நெத்தலி, கோவா நெத்தலி (மேலைக்கடலில் மட்டுமே கிடைப்பது), நெடுவா, கறுப்பு நெடுவா, நெய் மஞ்சளா, நெடுங்கவலை, நெடும்பீலி, நெடுந்தலையன், நெளியன், நெய்க் கோமாரியன், நொன்னா (நுண்ணா – தும்பு அளவுக்குச் சிறிய வெள்ளைநிற பொடிமீன், கையில் தடவித்தான் எடுக்க முடியும்), நொறுக்கி, நொனாலி, நொய், மஞ்சள் பழம் மற்றும் மஞ்சள் கட்டா குட்டி என பல வகைகள் நெத்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நெத்திலி மீனின் சிறப்புகள்
கடலில் வாழும் மீனினத்தில் மிகச்சிறிய மீன்களில் நெத்திலி மீன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். உலகின் பெரும்பாலான கடற்பரப்பில் பெருங்கூட்டமாக வாழும் நெத்திலி மீன்கள் கடற்பாசிகளை அதிகம் உண்டு வாழும் மீன்களாகும்.
நெத்திலி மீனின் மருத்துவ நன்மைகள்
நெத்திலி மீன்களை நன்றாக வேகவைத்து குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் தொடர்ச்சியாக கொடுத்து வந்தால் அவர்களின் எலும்பு பலமாக உதவியாக இருக்கும். இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வராமல் தடுப்பதற்கு நெத்திலி மீன் உணவுகள் மிகுந்த பயன் தரக்கூடியதாகும்.
கருவாடாகவும் மீனாகவும் சுவையும் மதிப்பும் ஒருங்கே பெற்றுள்ள மீனினத்தில் நெத்திலி மிகமுக்கியமான ஒன்று. இதில் தமிழகத்தின் குமரிக்கடற்பகுதியில் மட்டுமே கிடைக்கும் கருப்பு நெத்திலி மிகச்சிறந்த மீனாகும். ஆகையினால் குமரி கருநெத்திலிக்கு சந்தை மதிப்பு அதிகமாகவும், வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் ஒன்றாகவும் உள்ளது.
நெத்திலி மீனை உண்ணும் முறைகள்
நெத்திலியை சுத்தம் செய்வது மிக எளிது. தலையை மட்டும் நீக்கினாலே போதுமானது. தலையை நீக்கும் பொழுதே குடலும் நீங்கிவிடும். சிலர் நெத்திலியை நன்றாக கழுவி முழுதாக போட்டும் சமைப்பர். நெத்திலியை மீனாகவும் கருவாடாகவும் பின்வரும் உணவுகளாக உண்ணலாம்.
- நெத்திலி மீன் குழம்பு
- நெத்திலி மீன் தொக்கு
- நெத்திலி மீன் வறுவல்
- நெத்திலி கருவாடு குழம்பு
- நெத்திலி கருவாடு தொக்கு